வரலாற்றுக் கவிதைகள்

ரோமும் பீடிலும்




 

 



ரோம் நகரம்

தீயில் வெந்து கணங்களை இழந்து

காற்றில் உறைந்து

சரித்திரங்கள் எல்லாம் - உருகி வழிந்து

சாம்பல்களுக்கும்

சத்தியங்களுக்கும் நடுவில்

ஊசலாடுகின்ற போது

ரோம்

மன்னன் நீரோ பீடில்களின்

தந்திகளுக்கு இதமாய் தடவித்

தலாட்டுப் பாடிக்கொண்டு

இருந்தான்




வரலாற்று பக்கங்கள் வாய்

கூசாமல்

அள்ளித் தெளித்த

அப்பட்டங்களின் மூட்டைகளில் இருந்து

சிந்திய சில துளிகள்

தான் இவை




ரோம சாம்ராஜ்ஜியத்தின்

சோம பானத்திற்கான

ஆட்சி பீடம்

நீரோவின் மடிகளில் தாலாட்டப் பட்டு

இருந்தது

அவனோ மங்கைளின் மஞ்சங்களுக்கும்

நெஞ்சங்களுக்கும் அத்தர்

பூசும் வேலையில் அலாதி

அர்ப்பணிப்பில் இருந்தான்




இளவயதில்

காலம் - தன் கணக்கில் இரண்டு

தெரிவுகளைத்

தருகிறது

நமக்கு ஒன்று மட்டுமே மாயக்

கண்களுக்கு காட்டுகிறது

ஒன்று சிறகு

ம்ற்றொன்று சவப் பெட்டி

இதில் சிறகுகளை மட்டும் கட்டிக் கொண்டு

சிட்டாய் பறந்தடிப்பவர்கள்

ஒரு ரகம்

சவப் பெட்டிகளைப் பூட்டிக்

கொண்டு

மழுங்கிப் போனவர்கள் இன்னொரு

ரகம் - ஆனால்

நீரோவோ

சிறகுகளைக் கட்டிக் கொண்டு

சவப் பெட்டிக்குள் படுத்துக் கொள்ளும்

மூன்றாவது ரகம்




சதா மங்கையும் மஞ்சமும்

ஒயினும், உதடும்

பீடிலும், தீயும்

ரோமும், சோமமும்

என்று  வாழ்க்கை ஒயின் துளிகளில்

வழுக்க வழுக்க

இன்பத்தின் உதடுகளுக்கு எட்டி எட்டி

முத்தமிட்டுக் கொண்டு

இருந்தான் நீரோ




ஏழு இடங்களில் மீட்டும் போது

தான் பீடில்

இசை எழுப்பும் -அது ஒன்றும்

அவனுக்குப் புதிதல்ல

அது அந்நியமானதும் அல்ல

தந்திக் கம்பிகள்

நீரோவின் தடவல்களுக்காய் தவம்

இருந்தன- ஆனால்

தடவல்கள் எல்லாம் வழுக்கலாய்

போனது

அவன் ஒயின் ஒழுகும் விரல்களின்

உரசல்களில்




பீடில் மங்கைகளின்

மார்புத் தந்திகளுக்கு

ஏழு இடங்களிலும் உணர்வுகளை

அள்ளி இறைத்துக்

கொண்டு தீச்சுவாலை ஒன்றைக் கண்

முன் நிறுத்தி

தீப்பாடல் ஒன்றிற்காய்

பீடில்களுக்கும்

விரல்களுக்கும்

விவாதம் ஒன்றைத் தொடங்கி

தீப்பாடல் ஒன்றை

முணுகலாய் இரைந்து முடித்தான்

நீரோ




கலைஞன் என்கிறவன்

அனுபவத்தின் கணவனாய் இருக்க

வேண்டும்

உயிர்ப்பையும் உயிரையும் உணர்வுக்கும்

உலகுக்கும்

வீசியெறியும் வித்தைக்குத்

தலைவனாய் இருக்க வேண்டும்




தீப்பாடல் என்பது

தீயின் ரணங்கள் வெதும்ப வெதும்ப

காற்றும்

கடலும் ஒடுங்க ஒடுங்க

தணலும் தீயும் தக தகக்க

தங்கக் குழம்பு

கொதிக்க கொதிக்க

பாட வேண்டும்

ஆனால் நீரோவோ திப்பந்தத்தை கொண்டு

இரைந்து முடித்தது

தீயும் அல்ல, தக தகப்பும் அல்ல

உயிரற்ற எழுத்தும்

அதனுடன்

உறவு கொண்ட வரிகளும் தான்




சினந்தான்

நான் தீப்பாடல் பாடவேண்டும்

தணலும் தகதகப்பும் தர்க்கம் புரிய

தீயு தீயும் தீயிலே

தீய்ந்து போக நெருப்பைச் சாம்பலும்

சாம்பலைக் காற்றும்

கணப்பொழுதில் கரைந்து போக்க

எரிமலைக் குழம்பொன்றை சூரியன் விழுங்க

செந்தணற் சுவாலை யுகங்களை

பொசுக்க

கண்கள் இரண்டும் அவற்றிலே

பழுக்க - நான் தீப்பாட்டு பாட வேண்டும்

சினந்தான்



கர்ஜிப்புக்கள் கடாரென உடைந்து

வாய் வழியே கசிந்தது

மாபெரும் தீயொன்றை நான் காண வேண்டும்

கர்வமாய் கர்ஜித்தான்

பீடில் மங்கையின் தீயில் கவிதை

தெறிக்கும் மார்புகள் பிதுங்க

நீர்த் துளி தீயில் கருக

தீயில் தீப்பாடலொன்றை

ஏழு இடங்களிலும் ஜாசிக்க வேண்டும்




ரோம் நகருக்கும் தீப்பந்த மொன்றுக்கும்

தர்க்கப் போராட்டம்

இறுதியில் ரோம் நகரை தீப்பந்தம்

வென்றது

மன்னனின் கர்ஜிப்பு

ரோமிற்கு தீயில் குளிப்பாட்ட

பணித்தது

ரோமும் தீயில் கலக்கிறது




உலகைக் கொழுத்துங்கள் - என் நகரைக்

கொழுத்துங்கள்  தீயின்

அகோரம் -காண்பதற்காய்

ரோம் எரிக்கப்பட்டது

ரோம் எரிகிறது...!

ரோம் எரிகிறது...!

பீடில் மீட்பதற்காய்

நீரோவின் கட்டளைக்காய்




ஏழு இடங்களும் எக்காளமிட

தந்திகள் யாவும்

ஒயினுடன் உறைய - கண்கள்

இரண்டும் தீயில் வெதும்பி வெளிவர

யுகங்கள் ஏழும் -சூர்க்குமமாக

தீயையும்

நாட்டையும் தீயாலே மூட

தணலும் தகதகக்க

வெம்மையின்

வெதும்பலோடு தீப்பாடல் பாடப்பட்டது

தீயைப் பாடலாக்கினான்

இதுதான் வரலாற்று பக்கங்களில்

கிழித்தெடுக்கப்பட்ட உண்மை

மறைத்து அழிக்கப்பட்ட

வெம்மை






அரேபியாவில் போர்கள வீரர்கள்

எல்லாம்

குதிரைக் குழம்படிகளை  தான்

வழியாக்கி

எதிரிகளின் குருதியை

சாவகமாய்

பாசனம் செய்வார்களாம் !




வரலாறு எல்லாம் இப்படித்தான்

கால கணிதங்களையும்

கடந்து வந்த பாதைகளையும்

குருடனுக்கு

ஓவியத்தை காட்டிய ரவிவர்மர்கள்

போல்

மறைத்து மழுப்புவதே

மரபோ..?




எம் தேசத்தானும்  அப்படித்தான்

குதிரைக் குழம்படிகளுக்கு

குங்குமப் பூ இரசங்களை

தாரை வார்த்த

அரேபிய பயில்வான்கள்

தானே....!


நீரோவைப் போல் தன் சுகம் காண

தேசத்தையும் மக்களையும்

அக்கினிக் குஞ்சுகளுக்கு

இரை போட்ட

வித்தகர்கள்




போர்க்களங்கள் மறினாலும்

போர் அழியாது

இரத்தங்கள் சிந்தினாலும் காலம் இரத்தக்

கறைகளை மட்டும்

சம்மதிக்காது

ஆட்சிகள் மாறினாலும் அதன்

முறைகள் மட்டும்

மாறாது





எம் மண் மழைத் துளிகளையும் - பனித்

துளிகளையும்

உறிஞ்சி உறிஞ்சியே

தித்திப்பில் உறைந்து விட்டதால் இரத்தக்

கறைகள்

எல்லாம் இன்னமும் உறிஞ்சப்  படாமல்

ஊசலாடுகின்றன

இல்லை...!...!  இரத்த ஆறுகள்

ஓடி ஓடியே

கரைந்து விட்ட பூமித்தாய்

சுவாலைகளுக்கு இடம் தர முடியாது

திணறுகிறாள்

வசனங்கள் எல்லாம் விசித்திரமாக

இருந்தாலும் இவைதான்  -எம்

சரித்திரங்கள்.



(எனது கவிதைத் தொகுப்பிற்காக எழுதப்பட்டுக் கொண்டிருப்பவை)
 
      



TamilCNN வலைத் தளத்தில் வெளியாகியுள்ள என்னுடைய இந்தக் கவிதையைப்
பார்ப்பதற்கு இங்கே கிளிக்செய்யவும். http://www.tamilcnnlk.com/poem/201681.html

1 கருத்து:

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *